அந்த வஸ்து அசையாமல் இருந்தது.
கோடான கோடி வருஷம் அப்படியே கிடந்தது
பின்னொருநாள் ஒருவன் வந்தான்
துணி துவைக்க உதவுமென்று வெட்டிச் சென்றான்
அரைக்க உதவுமென்று அம்மியாக்கினான்.
கலைஞன் வந்தான் கல்லில் கன்னியைக் கண்டான்
கற்றோர் வந்த்னர் கல்லில் கடவுளைக் கண்டனர்
குன்றம் என்றது குடைவரைக் கோயிலானது
ஆயினும் கல் அப்படியேதான் இன்றும் உள்ளது.
இன்னும் கோடான கோடி ஆண்டுகளிலும்
அப்படியேதான் இருக்கப்போகிறது.
கண்ணில் தெரியும் காட்சி
ஜூன் 22, 2011வியத்தலை வியத்தலும் வியப்பே!
ஜூன் 22, 2011பிள்ளைப் பிராயத்தில்தான்
உலகமே தெரிந்தது.
மூஞ்சூற்று மூக்கின் சிவப்போர் வியப்பு
பிறந்த குழந்தையின் பிச்சுப்பாதம் சிவப்பு!
பொத்தென விழும் பனம்பழம் வியப்பு!
விழுமா அதுவென ஆலவட்டமடிக்கும்
காத்தாடி விதை வியப்பு!
கோயில் அடிப்பொடி கோவிந்த மொட்டையின்
தரை இறங்கா பிரசாததட்டு வியப்பு!
காலைச்சூரியன் வியப்பு
மாலை மதியும் அதுபோல் வியப்பு!
காலைக்கருக்கலில் குளித்து மீளும்
ஈரப்புடவைகள் விழாமல் நடப்பது வியப்பு!
கழைக்கூத்தாடியின் கயிற்றுநடை வியப்பு!
கஞ்சி காணாத அடிவயிற்றின்
அரைஞாண் கயிறு வியப்பு!
வியக்க வியக்க, வியக்க வைக்கும் பேருலகம்
வியந்து நின்று விந்தைகாணும் என்னுலகம்.
வியத்தல் அரிது!
வியத்தலை வியத்தல்
அதனினும் அரிதே!
பரவெளி பாதம் பட்டு
மே 5, 2011அது தமிழெல்லாம் இல்லாப்
பெருவெளி
வார்த்தைகள் அக்குவேறு
ஆணிவேறு என்று பிரிக்கப்பட்ட
பொதுவெளி
காலமும் வெளியும்
கூட முயங்கப்பார்க்கும்
தனிவெளி
அங்கு ஏதோ பாதம்
கண்டார் என்று
கமண்டலத்து நீரை
வருஷிக்க
பீரிட்டு எழுந்து
அலை, அலையாய்
விண் தாவி
தண் மலைதாவி
கரு நிலம் தாவி
கரைபுரண்டு ஓடி
வந்ததாம்!
அதுதான்
கவிதையாம்
மீன் தொட்டி
ஆகஸ்ட் 12, 2010ஐயா சொன்னார்
அற்புதமாக இருந்தது
கேட்கக் கேட்க
வாசிக்க வாசிக்க
எல்லாம் புரிந்தது போல்
புல்லரித்தது.
மீன் தொட்டியில் மீன்
அது அங்கே
நான் இங்கே
கண்ணில் படாத கவிதை
மே 24, 2010பனியின் உக்கிரத்தைக்
குறைக்க வந்தது இளவேனில்
இரவு குறைந்து பகல் நீண்டது
சூரியன் அப்பாலுக்கு அப்பாலாய்
நின்று கொண்டு இப்பூமிக்கு சேதி சொல்ல.
பட்டென ஒரு பொழுதில் பூ பூத்தது.
எட்டா உயரத்தில் எம்பி நிற்கும் மாமரங்கள்
குள்ளக்கள்வனாய் கண்ணில் படா
குறுஞ்செடிகள்
என்றிவை எல்லாம் ஒரே நேரத்தில்
மலர்ந்து சிரிக்க
மழலைகள் கைக்கெட்டும் தூரத்தில்
நின்று சிரிக்கும் மலரை தாவிப்பறிக்க..
யார் கண்ணிலும் படாமல்
தும்பை போல், நெருஞ்சி போல்
எங்கோ ஒளிந்து சிரிக்கும்
என்
கண்ணில் படாத கவிதை!
சுடலை தரும் பாடம்
மே 24, 2010சுடலையில் தடபுடா
கடபுடா என்றொலி இரவில்
கேட்டது
நர்த்தனம் ஆடிடும்
சிவனின் ஒலியென்றாள்
அவள்
பட்டுப்படீரென
மூங்கில் ஒடிபடும்
ஓசை வந்தது.
எலும்புகள் முறிந்தொடிய
தசைநாண்கள் விடுபடும்
ஓசை என்றாள் மீண்டுமவள்!
சட்டச்சடவென
கொட்டும் மழையெங்கும்
பொங்கிப் பிரவாகமாகி
முட்டிமுழக்கி
பாய்ந்து ஓய்ந்தது.
மறுநாள்
பள்ளி போகுமுன்
சுடலையில் தேடிய
சிவனின் சுவடுகளுடன்
ஒடிந்து முறிந்த எலும்புகளும்
பட்டுத்தெறிந்த வெண்சாம்பலும்
நிறைந்திருக்க…
நான் போட்ட புளிய விதை
முளைத்துவிட்டது
என்று சொல்லி
பள்ளிக்கு ஓடினாள்
மீண்டும் அவள்.
கன்னத்தில் முத்தமிட்டால்
April 27, 2010கொட்டக்கொட்ட
விழித்த வண்ணம்
தியானம் கிட்டுமா என்று
காத்திருந்த போது,
கண்ணை மூடு என்றொரு குரல்,
காதைத்திற என்றொரு குரல்,
எங்கும் பார் என்றொரு குரல்,
சிந்தனையைக் கூர்மை செய்
என்றொரு குரல்.
இத்தனைக்கும் இடையில்
அன்பு முத்தமிட்டாள்(ல்)
வரும் கவிதை
வாட்டும் மாலை
April 27, 2010புலரும் பொழுது
புதிதாய் நின்றது
நல்ல வேளை கெட்ட கனவுகள்
என்றேதுமில்லை
பசும்புல்லின் மேல் நின்ற
பனித்துளி கனுக்காலில்
சில்லிட்டு கண்டு கொள் என்றது.
நாள் வளர்ந்தது
கணத்தின் ஊடாய்
பாய்ந்து புறப்பட்ட
அனுபவக்கீறல்
மெல்லச்சாட
மாலையில்
வந்து சாய்ந்த
சவமாலை
என்றிருந்த
அக்கணம்
காலைக்கு ஏங்கியது.
கற்றமொழியாகக் கலத்தல்
April 27, 2010தூரிகையைக் கொடுத்து
கண்டதைக் காட்சிப்படுத்து
என்றார் ஓவிய ஆசிரியர்.
எண்ணங்கள் சீராகப் பாயவேண்டும்.
கவிதையில் உள்பாய்ந்து நிற்கும்
இலக்கணம் போல
கண்டது காட்சிப்பட வேண்டும்.
தூரிகையைத்தொட்டவுடன்
ஓடும் மனம் வேகமாய் ஓட
காது, மூக்கு, கால்கள், கண்கள்
என்றென எல்லாம் முயங்கிப்
பிசைந்து வந்து தோற்றமுற்றபோது?
என்ன உனக்கு பிகாசோ என்று நினைப்போ?
என்றார் ஆசிரியர்.
மறுக்கமுடியாமல் சித்தன்னவாசலும்
ரவிவர்மாவும், மைக்கேல் ஆஞ்சலோவும்
வந்து வந்து போயினர்.
கவிதை செய் என்றால் கூட
இலக்கணம் எங்கு நிற்கும்
என்று தெரிவதில்லை!
முகமண்டலம் வரையப்புக்கின்
முகம் சொல்லும் சேதியில்
முகம் மறைந்து வீம்பி நிற்பது
கொலாஜெனும் கோலமே.
உனக்கு ஏது விடிவு? என்று பிரிந்த
ஆசிரியர், கற்றமொழியாகக் கலந்து
உனக்கு உள்கொண்டு
அருள் செய்தால் உண்டு!
என்று போயினர்.
கவசம்
April 27, 2010என்ன குழப்படி?
என்ற கேள்வியுடன்தான் நுழைவார் தந்தை!
எவ்விதக் குழப்படியும் இல்லாத போதும்!
குழப்படி என்னவென்று குட்டை மணி
கோள் சொல்லியபோது,
அதன் பலனாகப் பிரம்படி
பட்டபோது உணர்ந்தேன்.
சொல்லும் வார்த்தையில்
எழுதும் சொல்லில்
சொல்லின் பொருளில்
என்றெல்லாம் கவனம் கொண்டும்
சொல்லிய பின் குழப்புவதற்கென்றே
வருகின்றனர் சிலர்.
சொல்லாத சொல்லுக்கு பொருளேதும் இல்லை
எனவே
சொல்லறு சும்மா இரு என்றான் கடம்பன்.
தூங்கும், முன்னும் தூங்கிய பின்னும்
முதலில் எழுவது எண்ணமாய் இருக்கும் போது
சும்மா இருக்க முடியவில்லை.
வெறும் புள்ளி வைத்துப் பொருள் சொல்
என்றார் லா.ச.ரா
நான் கவிதை என்று எழுதினாலும்
நான் காணா புதுப்பொருள் சொல்ல
மட்டும் யாரும் வருவதில்லை!
சொல்லறு சும்மா இரு என்பதற்குப்பதில்
சொல்லேறே, சும்மா எழுது என்றால்
கவிதை ஒரு கவசமே!
Kasumi chan பதிப்பித்தது.