பனியின் உக்கிரத்தைக்
குறைக்க வந்தது இளவேனில்
இரவு குறைந்து பகல் நீண்டது
சூரியன் அப்பாலுக்கு அப்பாலாய்
நின்று கொண்டு இப்பூமிக்கு சேதி சொல்ல.
பட்டென ஒரு பொழுதில் பூ பூத்தது.
எட்டா உயரத்தில் எம்பி நிற்கும் மாமரங்கள்
குள்ளக்கள்வனாய் கண்ணில் படா
குறுஞ்செடிகள்
என்றிவை எல்லாம் ஒரே நேரத்தில்
மலர்ந்து சிரிக்க
மழலைகள் கைக்கெட்டும் தூரத்தில்
நின்று சிரிக்கும் மலரை தாவிப்பறிக்க..
யார் கண்ணிலும் படாமல்
தும்பை போல், நெருஞ்சி போல்
எங்கோ ஒளிந்து சிரிக்கும்
என்
கண்ணில் படாத கவிதை!