சுடலையில் தடபுடா
கடபுடா என்றொலி இரவில்
கேட்டது
நர்த்தனம் ஆடிடும்
சிவனின் ஒலியென்றாள்
அவள்
பட்டுப்படீரென
மூங்கில் ஒடிபடும்
ஓசை வந்தது.
எலும்புகள் முறிந்தொடிய
தசைநாண்கள் விடுபடும்
ஓசை என்றாள் மீண்டுமவள்!
சட்டச்சடவென
கொட்டும் மழையெங்கும்
பொங்கிப் பிரவாகமாகி
முட்டிமுழக்கி
பாய்ந்து ஓய்ந்தது.
மறுநாள்
பள்ளி போகுமுன்
சுடலையில் தேடிய
சிவனின் சுவடுகளுடன்
ஒடிந்து முறிந்த எலும்புகளும்
பட்டுத்தெறிந்த வெண்சாம்பலும்
நிறைந்திருக்க…
நான் போட்ட புளிய விதை
முளைத்துவிட்டது
என்று சொல்லி
பள்ளிக்கு ஓடினாள்
மீண்டும் அவள்.