பிள்ளைப் பிராயத்தில்தான்
உலகமே தெரிந்தது.
மூஞ்சூற்று மூக்கின் சிவப்போர் வியப்பு
பிறந்த குழந்தையின் பிச்சுப்பாதம் சிவப்பு!
பொத்தென விழும் பனம்பழம் வியப்பு!
விழுமா அதுவென ஆலவட்டமடிக்கும்
காத்தாடி விதை வியப்பு!
கோயில் அடிப்பொடி கோவிந்த மொட்டையின்
தரை இறங்கா பிரசாததட்டு வியப்பு!
காலைச்சூரியன் வியப்பு
மாலை மதியும் அதுபோல் வியப்பு!
காலைக்கருக்கலில் குளித்து மீளும்
ஈரப்புடவைகள் விழாமல் நடப்பது வியப்பு!
கழைக்கூத்தாடியின் கயிற்றுநடை வியப்பு!
கஞ்சி காணாத அடிவயிற்றின்
அரைஞாண் கயிறு வியப்பு!
வியக்க வியக்க, வியக்க வைக்கும் பேருலகம்
வியந்து நின்று விந்தைகாணும் என்னுலகம்.
வியத்தல் அரிது!
வியத்தலை வியத்தல்
அதனினும் அரிதே!