கன்னத்தில் முத்தமிட்டால்

April 27, 2010

கொட்டக்கொட்ட
விழித்த வண்ணம்
தியானம் கிட்டுமா என்று
காத்திருந்த போது,
கண்ணை மூடு என்றொரு குரல்,
காதைத்திற என்றொரு குரல்,
எங்கும் பார் என்றொரு குரல்,
சிந்தனையைக் கூர்மை செய்
என்றொரு குரல்.
இத்தனைக்கும் இடையில்
அன்பு முத்தமிட்டாள்(ல்)
வரும் கவிதை

Advertisements

வாட்டும் மாலை

April 27, 2010

புலரும் பொழுது
புதிதாய் நின்றது
நல்ல வேளை கெட்ட கனவுகள்
என்றேதுமில்லை
பசும்புல்லின் மேல் நின்ற
பனித்துளி கனுக்காலில்
சில்லிட்டு கண்டு கொள் என்றது.
நாள் வளர்ந்தது
கணத்தின் ஊடாய்
பாய்ந்து புறப்பட்ட
அனுபவக்கீறல்
மெல்லச்சாட
மாலையில்
வந்து சாய்ந்த
சவமாலை
என்றிருந்த
அக்கணம்
காலைக்கு ஏங்கியது.


கற்றமொழியாகக் கலத்தல்

April 27, 2010

தூரிகையைக் கொடுத்து
கண்டதைக் காட்சிப்படுத்து
என்றார் ஓவிய ஆசிரியர்.
எண்ணங்கள் சீராகப் பாயவேண்டும்.
கவிதையில் உள்பாய்ந்து நிற்கும்
இலக்கணம் போல
கண்டது காட்சிப்பட வேண்டும்.
தூரிகையைத்தொட்டவுடன்
ஓடும் மனம் வேகமாய் ஓட
காது, மூக்கு, கால்கள், கண்கள்
என்றென எல்லாம் முயங்கிப்
பிசைந்து வந்து தோற்றமுற்றபோது?
என்ன உனக்கு பிகாசோ என்று நினைப்போ?
என்றார் ஆசிரியர்.
மறுக்கமுடியாமல் சித்தன்னவாசலும்
ரவிவர்மாவும், மைக்கேல் ஆஞ்சலோவும்
வந்து வந்து போயினர்.
கவிதை செய் என்றால் கூட
இலக்கணம் எங்கு நிற்கும்
என்று தெரிவதில்லை!
முகமண்டலம் வரையப்புக்கின்
முகம் சொல்லும் சேதியில்
முகம் மறைந்து வீம்பி நிற்பது
கொலாஜெனும் கோலமே.
உனக்கு ஏது விடிவு? என்று பிரிந்த
ஆசிரியர், கற்றமொழியாகக் கலந்து
உனக்கு உள்கொண்டு
அருள் செய்தால் உண்டு!
என்று போயினர்.


கவசம்

April 27, 2010

என்ன குழப்படி?
என்ற கேள்வியுடன்தான் நுழைவார் தந்தை!
எவ்விதக் குழப்படியும் இல்லாத போதும்!
குழப்படி என்னவென்று குட்டை மணி
கோள் சொல்லியபோது,
அதன் பலனாகப் பிரம்படி
பட்டபோது உணர்ந்தேன்.
சொல்லும் வார்த்தையில்
எழுதும் சொல்லில்
சொல்லின் பொருளில்
என்றெல்லாம் கவனம் கொண்டும்
சொல்லிய பின் குழப்புவதற்கென்றே
வருகின்றனர் சிலர்.
சொல்லாத சொல்லுக்கு பொருளேதும் இல்லை
எனவே
சொல்லறு சும்மா இரு என்றான் கடம்பன்.
தூங்கும், முன்னும் தூங்கிய பின்னும்
முதலில் எழுவது எண்ணமாய் இருக்கும் போது
சும்மா இருக்க முடியவில்லை.

வெறும் புள்ளி வைத்துப் பொருள் சொல்
என்றார் லா.ச.ரா
நான் கவிதை என்று எழுதினாலும்
நான் காணா புதுப்பொருள் சொல்ல
மட்டும் யாரும் வருவதில்லை!

சொல்லறு சும்மா இரு என்பதற்குப்பதில்
சொல்லேறே, சும்மா எழுது என்றால்
கவிதை ஒரு கவசமே!


மீண்டுமொரு திங்கள்

April 27, 2010

மீண்டுமொரு திங்கள்
மீண்டுமொரு ஓட்டம்
அடிச்சுப் பிடிச்சு அலைந்து திரிந்து
அலுவலகம் போய் ஆபீசர் முன்
கைகட்டி உத்தியோகம்.
அலுத்துக் கொள்ள என்ன உள்ளது?
அண்டார்டிக்கில் ஆளில்லை என்றாலும்
புயல் அடிக்கிறது, காற்று வீசுகிறது
பனி கண்டு அஞ்சாது நட்டக்குத்தாய்
நிற்கின்றன பென்குவின் பறவைகள்
பனிக்கால முழுவதும்!
மாற்றுக்குக் கடலில் தாவலாம் என்றாலும்
கடலிலும் குளிருக்குக் குறைவில்லை.
எப்பொருள் தேடி எரிமலை குமறுவதும்
அடைமழை பொழிவதும்
அனல்காற்று வீசுவதும்?
ஆடி, ஆடி அடியற்ற மரம் போல்
வீழ்ந்து கிடந்தாலும்
அலைச்சல் நிற்பதில்லை!
ஓடும் நாய்க்கு ஓய்ச்சலேது?
என்றது ஒரு ஞானக்குஞ்சு