கண்ணில் தெரியும் காட்சி

June 22, 2011

அந்த வஸ்து அசையாமல் இருந்தது.
கோடான கோடி வருஷம் அப்படியே கிடந்தது
பின்னொருநாள் ஒருவன் வந்தான்
துணி துவைக்க உதவுமென்று வெட்டிச் சென்றான்
அரைக்க உதவுமென்று அம்மியாக்கினான்.
கலைஞன் வந்தான் கல்லில் கன்னியைக் கண்டான்
கற்றோர் வந்த்னர் கல்லில் கடவுளைக் கண்டனர்
குன்றம் என்றது குடைவரைக் கோயிலானது
ஆயினும் கல் அப்படியேதான் இன்றும் உள்ளது.
இன்னும் கோடான கோடி ஆண்டுகளிலும்
அப்படியேதான் இருக்கப்போகிறது.

Advertisements

வியத்தலை வியத்தலும் வியப்பே!

June 22, 2011

பிள்ளைப் பிராயத்தில்தான்
உலகமே தெரிந்தது.
மூஞ்சூற்று மூக்கின் சிவப்போர் வியப்பு
பிறந்த குழந்தையின் பிச்சுப்பாதம் சிவப்பு!
பொத்தென விழும் பனம்பழம் வியப்பு!
விழுமா அதுவென ஆலவட்டமடிக்கும்
காத்தாடி விதை வியப்பு!
கோயில் அடிப்பொடி கோவிந்த மொட்டையின்
தரை இறங்கா பிரசாததட்டு வியப்பு!
காலைச்சூரியன் வியப்பு
மாலை மதியும் அதுபோல் வியப்பு!
காலைக்கருக்கலில் குளித்து மீளும்
ஈரப்புடவைகள் விழாமல் நடப்பது வியப்பு!
கழைக்கூத்தாடியின் கயிற்றுநடை வியப்பு!
கஞ்சி காணாத அடிவயிற்றின்
அரைஞாண் கயிறு வியப்பு!
வியக்க வியக்க, வியக்க வைக்கும் பேருலகம்
வியந்து நின்று விந்தைகாணும் என்னுலகம்.
வியத்தல் அரிது!
வியத்தலை வியத்தல்
அதனினும் அரிதே!