உன் கவிதை என் வரியில்

September 29, 2013

என் சொல்லின் வளம் காண
வடிக்கும் முறை காண
செதுக்கும் திறம் காண
மயக்கும் மொழி காண
எழுதவில்லை
கவிதை
நான்.

நின்
இருப்பின்
நிலை
சொல்ல
எழுத்ததே

இக்கவிதை.

Advertisements

இறைமைக்கிட்டுச்செல்லும் இராப்பொழுதுகள்

September 29, 2013

இரவுகள் ஏன் தோன்றின?

அரவமில்லாக் காட்டில்
பரபரக்க நகரும் உருவமில்லா
நிழல்களின் உரசல் ஒலிகூட
உறைக்க வைத்து மறைந்து சாகும்.
மோனத்துயில் கொள்ளும்
தூரத்து பொய்கையில்
விழுந்து தவழும்
உதிர் இலை கூட
ஒரு கணம் விதிர்க்க வைத்து
விந்தை செய்யும்.
யாருமில்லா வீட்டினுள்
தனிமையில் ஒழுகும்
குழாயின் சொட்டொலி
இடிக்கும் மேகத்தை
இருளில் அழைத்துவரும்.

இரவு தனிமை
இரவு மோனம்
இரவு ஆழம்

இரவு இல்லையேல்
இறைமையும் இல்லை


இருப்பு இன்னதென்று

September 29, 2013

பட்டத்து இளவரசியைப் பார்ப்பது துர்லபம்
ஊரெல்லாம் அவளாட்சி என்றாலும்
அவள் இருப்பு அந்தப்புரத்தில்தான்
மந்திரிப்பிரதானிகளும் முகமறியார் என்று பேச்சு
இருப்பது தெரிகிறது இன்னதென்று கண்டதில்லை
மெல்லிய திரைச்சீலையின் பின்னால் இருக்கும்
கோட்டு ஓவியம் அவள்
அவளது ஆணைகள் மெல்லிய காற்றலையாய்
சிலை தாண்டி வெளிவந்து விஸ்வரூபமெடுக்கும்
இருப்புத்தெரிகிறது இன்னதென்று கண்டதில்லை
இதயத்து ராணி என்று
ஊர் மக்கள் சொல்கின்றனர்.


பேய்த்தேர்

September 29, 2013

காட்டுத்தீ போல்
பரவியது
சேதி
என்றது பத்திரிக்கை.

நெருப்பு இல்லாமல் புகை வருமா?
இச்சேதிக்குப்
பின் ஏதோ விஷயம் இருக்கிறது
என்றது விஷம இதழ்.

மனிதன் என்பவன்
தனித்த இனம் மட்டுமன்று
ஒவ்வொரு மனிதனும்
தனித்த பிறவி
Unique என்றது
அறிவியல்.

என் சிந்தனை போல்
எவரும் இதுவரை
சொன்னதில்லை
நானே முதல்வன்
என்றான் கவிஞன்.

மழையில் தோன்றி
இலையில் தொங்கும்
முத்துநீரில் உலகம்
தெரிந்தது.
இலைக்காம்பைக்
காணாமலே
இருப்பதெல்லாம்
தன்னுள்ளே
என்று இறுமாப்பு
எய்தது
பனிநீர்.
—————-

பேய்த்தேர் = கானல்நீர்


கவிப்படி

September 29, 2013

நான் வரைந்த நேர்கோடு
மடிந்து ஒடிந்து
செருகி
ஏணியாகி
நின்றபோது
படிகள்
அளவு தந்தன
அலகு தந்தன
அணுக்க
நெருங்கும் போது
அதிர்வளித்தன
அரவணைத்தன
வரைந்த நேர்கோடு
(பா)மாலையாகி
வளைந்தும் நின்றது.

ஆனால்

நான் இழுத்ததென்னவோ
வெறும் நேர்கோடுதான்