ஒத்தடம்

October 19, 2013

தனித்தே இருக்கிறேன்.

இருமையில் இன்னும் கூடுதல் தனிமை.

என்ன? கூட ஒருவர் இருந்தால்
பேச்சுத்துணையாகலாம்,
ஆனாலும்
என்னை விட்டு
இத்தனிமை
போவதில்லை.
உடலைவிட்டு
நீங்காத நிழல் போல்.

தனிமை சோகம்தான்.
சோகமான ராகம் போல்
அழுவது சுகம் என்பது
போன்ற ஒரு சோகம்

தனித்து இருக்கும் போது
ஓரத்தில் நின்று கொண்டு
கண்ணசையும் ஒன்றையும்
இனம் காட்டத்தான் வேண்டும்.

அதுதான் ஒத்தடம்
அதுதான் கவிதை.

Advertisements

மரணத்தின் மொட்டு

October 17, 2013

அமிலத்தில் தோன்றிய

உயிர் நீ
அமினோ அமிலத்தில்
தோன்றிய உயிர் நீ
 
விண் கல்லெறி பட்டு
புவி உலையில் 
புடம் போட்டு 
அழுக்கை நீக்கி
அமுதைச் சேர்த்து
உருவானவள் நீ.
 
நீ உயிர்
நீ யாக்கை
நீ வாழ்வு
 
எரிதணலில்
எரிந்து
சாம்பலில்
பூக்கும்
பீனிக்ஸ் பறவை
நீ.
 
நீ உயிர்
நீ யாக்கை
நீ வாழ்வு
 
அசித்தைக் குழைத்து
சித்தைப் பூசி
செம்மையாய்
செய்த செஞ்சுடர் நீ.
 
நீ உயிர்
நீ யாக்கை
நீ வாழ்வு
 
உன்னுள் ஒரே
ஒரு சுடர் போதும்
உன்னையே உருக்கி
அமிலத்தில்
கரைத்து
சித்தை விட்டு
அசித்தை
மீண்டும்
அதனதன் 
இடத்திலிட்டு
தோன்றிய போதில்
தோன்றிய வடிவத்தில்
மீண்டும்
அமிலக்கரைசலாகி
அடுத்த முறைக்குக்
காத்திருக்கும்
 
நீ உயிர்
நீ யாக்கை
நீ வாழ்வு
 
அமிலத்தில்
உருவான நீ
அமுதம் சேர்ந்த 
போழ்தில் நீ
ஆருயிர் காட்டி
நின்றாய்.
 
வயிற்றில் அமிலம்
வாயில் நஞ்சு
எரிக்கும் தழல்
உடற்சூடு
விண்ணையும்
மண்ணையும்
உண்டு வாழும்
 
நீ உயிர்
நீ யாக்கை
நீ வாழ்வு
 
மரணம் 
உனக்கில்லை
மரணம்
உனக்கில்லை
 
ஏனெனில்
நீ
மரணத்தில்
மலர்ந்த
மாமொட்டு
 
ஆம்,
 
நீ உயிர்
நீ யாக்கை
நீ வாழ்வு

மின்மினி

October 17, 2013

விண்ணின் மேலொரு

கண் வைத்துப் பார்த்த போது
கருமைப் பூச்சில்
மின்மினிகள்.
 
சில மின்னின
சில மங்கின.
 
கருமைதான்
பின்புலம்.
 
சோம்பலான வாழ்வில்
பட்டுத்தெறிக்கும்
பளிச்சென்ற பொழுதுகள்
மின்மினி போன்றவை
 
என
உணர்ந்த போது
பொறி தட்டியது!

கரை கடந்து போகும் வாழ்வு

October 17, 2013

காட்டாற்று

வெள்ளம் போல்
கரை கடந்து
பாய்கிறது வாழ்வு.
 
ஆயிரம் கண்கள்
பார்த்துக் கொண்டே
இருப்பது அறிந்தும்
நான் காணப்படாதவளாகவே
உணர்கிறேன்.
 
சுற்றிச்சுற்றி சுற்றம்
இருந்தும்
இழுத்துப் பூட்டிய
என் சிறைக்கதவுகள்
மூடிய வண்ணமே
இருப்பதேன்?
என வியக்கிறேன்!
 
கூட்டுப்புழு கூட்டுக்குள்
அடைபட்டு
இருக்கும்
எனக்கு
என்று சிறகுகள்
முளைக்கும்?
 
காலம் வந்து
இருந்தவரை
அள்ளிக்கொண்டு
போகிறது
வெள்ளத்தில்
புரண்டு கொண்டு
அபய கரம் தோன்றுமா?
என வானைப்பார்க்கும்
அபலை போல்
உணர்கிறேன்.
 
காட்டாற்று
வெள்ளம் போல்
கரைகடந்து போகிறது
வாழ்வு.

அணுகக்கூச்சல்

October 11, 2013

கும்பலும் கூச்சலுமான
பிளிறலுடன் உலாவும்
யானைகள்
நொடிப்பொழுதில்
மௌனித்து
சிலையாகி விடுகின்றன.

மனிதச் செவிக்குட்படாத
அலைவரிசையில்
வரும் சேதியைக்
கேட்க அந்த அமைதியாம்.

அந்தி சாய்ந்து
ஆழ் இருளில்
உலகு தவழ்ந்திருக்கும்
வேலையில்தான்
எம் வேதனைகளும்
அவஸ்தைகளும்
மெல்ல மேலெழும்பி
வதைக்கத்தொடங்குகின்றன.

சின்ன அதிர்வலைகூட
ஒலிபெருக்கி வைத்து
ஊதுவது போல்
உள்ளே
பெருக்கமடைய…

கனவுகள் அதை
உள் வாங்கி
நாடகமாக்கி
ஊதிப் பெருக்கி
உவப்பிலும்
வெண்நரகிலும்
போட்டு வதக்கி
பிழிந்து எடுக்கும்
போது உடலார்
வேர்த்து விறுவிறுத்து
தொப்பலாகி
முழிக்கும் போது

வேறொரு பரிமாணத்தின்
அலகுகள் புலப்படுகின்றன.

இதனால்
இதனால் தான்
இரவுகளை
அணுகக்கூச்சமாக
உள்ளது.


வேலையற்ற பொழுதுகள்

October 11, 2013

மெர்டாக்க சதுக்கத்தில்
இங்கும் அங்குமென
சுற்றுலாப் பயணிகள்
அலைபாயும் தருணத்தில்,
துண்டை விரித்துப்
படுத்து தமிழிதழை
புரட்டிவிட்டு
நடுப்பகலில்
அசந்து சாய்வார்
அண்ணாச்சி.

சும்மா, பொழுது போகலே
அதான் கொஞ்சம் உம்மோடு
வம்படிக்கலாமே என
வந்தேன்!
எனத் திண்ணைப்பேச்சு
தொடரும்
கணபதி அக்ரஹாரத்தில்.

நடுவீட்டிலே
இடியே விழுந்தாலும்
ஒரு நொடிப் பொழுதையும்
வீணாக்காமல்
டிவி சீரியல்
பார்க்க அமர்வர்
கூட்டமாக
எல்லோரும்.

படிடா! படிடா! என்றால்
இவன் பொண்ணு பின்னாலே
சுற்றிவிட்டு, அரியர்
எதுக்கு இருக்கு பெரிசு?
என்று அசட்டை காட்டுகிறான்
என அலுத்துக்கொள்வார்
பையனைப் பெற்றோர்.

அணுவின் கருவிலே
ஒரு துகள்தான்
என்றாலும் சுற்றி
இருப்பதோ
வெறும் வெளிதான்.

வாழ்வின் பொருள்
ஒரு கணப்பொழுதில்
என்றாலும் வாழ்வு
என்பதோ வெட்டியான
வீண் பொழுதுகளில்தான்
நடைபோடுகிறது.

வேலையத்துப்
போய்தாய்யா
இந்தக்கடவுள்
எம்மைப்
படைத்தான்
எனச் சொல்லி
அரச மரத்து
நிழலில்
அமர்ந்து சுகம்
காண்பார்
ஜடாதர முனிவர்.


வாழ்வின் சுவாசம்

October 6, 2013

காற்றடித்த இலைகள்
தரும் சுகம்
தென்றல் மட்டுமல்ல,
சலசலப்பும்
நல்லிசையும்
கூடத்தான்.
.
மூங்கில் கீறும்
காற்று மெல்லிய
சிறுமூச்சாய்
சுரம் போட்டுப்
பார்க்கும்.

இடையே
யானையின்
பிளிறலும்
கழுதையின்
அலறலும்
இணைந்துதான்
போகிறது
வாழ்வெனும்
பெரும் பாட்டில்!