மப்பு

November 28, 2013

குவா குவா எனக்கூவும்
குரல் காற்றடையும் முன்னரே
வாயில் முலைப்பால்!
பின்
அன்னை மடியில்
அத்தை மடியில்
அக்கா மடியில்
பப்பு மம்மு
தச்சி மம்மு.

கல்யாணம்
கார்த்திகை
கருமாதி

என்றெல்லாம்
வாய்ப்புத் தவறவிடாமல்

உண்டு வளர்த்தேன்!
உடல் வளர்த்தேனே!

என்றும்

மண்ணில் கிடக்கும்
பயிர் பச்சை உண்டு
மண்ணாலாகிய
விலங்குயிருண்டு

மண்ணில் பிறந்து
மண்ணில் மடியும்
யாக்கையின்
கோட்டோவியமாக
மண்ணைத்தின்று
வாயைப்பிளைக்கும்
மணிவண்ணா
உனக்கு
மப்பு தட்டப்போகிறது!

Advertisements

பெருவாழ்வை நோக்கிய பெரும் கவிதை

November 28, 2013

ஏதோவொரு சட்டம்
என்ன சட்டமென்று
யாருக்குமே தெரியவில்லை
மீறக்கூடாது என்றெல்லாம் இல்லை
விதிவிலக்குகள் விழுந்து
கொண்டேயிருந்தாலும்
புரியாமல் நடைபெறுகிறது
ஓர் சட்டம்.
கையில் கொட்டிய நீர் போல
வாழ்வு.
தாகம் தணிந்தது
என்று சொல்லவா
விடுகிறது கைகழுவும் நீர்?
குடித்து நிமிரும் முன்
குடித்ததும் இல்லை
கொடுத்தவனும் இல்லை.
குடித்தது போன்றதொரு
உணர்வைக் கொண்டு வரும்
சட்டம்.
சட்டம் பேசிக்கொண்டு
சுவரில் முட்டினால்
இரத்தம் வருகிறது.
வலி இல்லை
மரணமில்லை
நோவு இல்லை
சாவு இல்லை
என்றெல்லாம்
சொல்லிவிட்டு
ஒவ்வொன்றாய்
மண்டையைப்
போடுகிறது.
மரணமில்லாப்
பெருவாழ்வை
நோக்கி
நடைபோடும்
இவ்வுரைக்கோவை
கருங்குழியில் விழுந்துச்
சாகும், கணினிகள்
நோவுற்றுத் தணியும்
போது.
அப்போதும்
கருங்குழிக்கு
அந்தப்புரம்
சட்டம் வரும்,
விதி மீறல்வரும்.
பெருவாழ்வை
நோக்கிய
பெருங்கவிதை
வரும்!