தியானம்

November 30, 2019

சப்பளாம் கட்டி
நெஞ்சு நிமிர்ந்து
கண்ணை மூடி
உள்ளே பார்த்தால்
உள்ளேயும் அதுதான்
இருக்கிறது


தன் தாள் பணிந்து

November 25, 2019

காதலுக்குக் கண்ணில்லை
என்பது பிழை
காதலின் வடிவே
கனிமொழி
கண்மணி
காதலே மழலை
காதலே பக்தி
காதலே பச்சைப்
பயிர்கள்
காதலே உயிர்
காதலே உணவு
காதலே நோய்
அதுவே மருந்து
காதல் கண்ணில் என்றால்
கன்னியின் மார்பகத்தில் நிற்கிறது அது
ஊழி முதல்வன் போல்
உருவம் கருத்த
கருக்குழியில் நின்று
போகிறது
அங்கே சுரக்கிறது
உமிழ்கிறது
உயிராய் மலர்கிறது.
காதலே வாழ்வு
காதலே உயிரோட்டம்
காதலே கவிதை
காதலே உணர்வு
அது தரும் களிப்பு.

காதலே வாழ்கவென
அர்ச்சிக்கும் மரமலர்கள்
தன் தாளில் நின்று.


கவிதை எழுதும் பொழுது!

November 25, 2019

பொழுது போகாப்
பொழுதுகளில்
பொழுது பற்றிய
சிந்தனை
பயமுறுத்தியது.
எத்தனை இன்பப்
பொழுதும் நிற்பதில்லை.
நல்ல பொழுதும்
கெட்ட பொழுதும்
நகர்ந்து கொண்டே
இருக்கின்றன.
போன பொழுது
கிடைக்காததால்
பொழுதும் சாக்காடும்
ஒன்றே.
நெருநல் உளன்.
இன்று இல்லை
என்பதூம்
பொழுது காட்டும் வித்தை.
பொழுது வரும்
போகும் எனும் போது
பொழுது
உன்னதா?
என்னதா?
உள்ளதா?


காரணம்?

November 25, 2019

கடந்தன
கழிந்தன
கரைந்தன
கண்ணை விட்டு
மறைந்தன
காலமாகிப் போனபின்பும்
காட்சி மட்டும்
நினைவில் நின்று
கடக்க மறுத்து
கழியா நின்றன
கரைய மறுத்தன
காலமாகாமல்
கல் போல் நின்றன.
தீயும் தொட முடியவில்லை
நீரும் கரைக்க முடியவில்லை
நினைவே நீ என்ன
சிரஞ்சீவியா எனக்
கேட்ட கேள்வியின்
முகமும் தேய்ந்து
போனதெனில்
ஏன்
தோன்றின
வாழ்ந்தன
கடந்தன
மறைந்தன
கரைந்தன
காரணமே
இல்லாமல்?
சொல்லாமல்?