தியானம்

November 30, 2019

சப்பளாம் கட்டி
நெஞ்சு நிமிர்ந்து
கண்ணை மூடி
உள்ளே பார்த்தால்
உள்ளேயும் அதுதான்
இருக்கிறது


தன் தாள் பணிந்து

November 25, 2019

காதலுக்குக் கண்ணில்லை
என்பது பிழை
காதலின் வடிவே
கனிமொழி
கண்மணி
காதலே மழலை
காதலே பக்தி
காதலே பச்சைப்
பயிர்கள்
காதலே உயிர்
காதலே உணவு
காதலே நோய்
அதுவே மருந்து
காதல் கண்ணில் என்றால்
கன்னியின் மார்பகத்தில் நிற்கிறது அது
ஊழி முதல்வன் போல்
உருவம் கருத்த
கருக்குழியில் நின்று
போகிறது
அங்கே சுரக்கிறது
உமிழ்கிறது
உயிராய் மலர்கிறது.
காதலே வாழ்வு
காதலே உயிரோட்டம்
காதலே கவிதை
காதலே உணர்வு
அது தரும் களிப்பு.

காதலே வாழ்கவென
அர்ச்சிக்கும் மரமலர்கள்
தன் தாளில் நின்று.


கவிதை எழுதும் பொழுது!

November 25, 2019

பொழுது போகாப்
பொழுதுகளில்
பொழுது பற்றிய
சிந்தனை
பயமுறுத்தியது.
எத்தனை இன்பப்
பொழுதும் நிற்பதில்லை.
நல்ல பொழுதும்
கெட்ட பொழுதும்
நகர்ந்து கொண்டே
இருக்கின்றன.
போன பொழுது
கிடைக்காததால்
பொழுதும் சாக்காடும்
ஒன்றே.
நெருநல் உளன்.
இன்று இல்லை
என்பதூம்
பொழுது காட்டும் வித்தை.
பொழுது வரும்
போகும் எனும் போது
பொழுது
உன்னதா?
என்னதா?
உள்ளதா?


காரணம்?

November 25, 2019

கடந்தன
கழிந்தன
கரைந்தன
கண்ணை விட்டு
மறைந்தன
காலமாகிப் போனபின்பும்
காட்சி மட்டும்
நினைவில் நின்று
கடக்க மறுத்து
கழியா நின்றன
கரைய மறுத்தன
காலமாகாமல்
கல் போல் நின்றன.
தீயும் தொட முடியவில்லை
நீரும் கரைக்க முடியவில்லை
நினைவே நீ என்ன
சிரஞ்சீவியா எனக்
கேட்ட கேள்வியின்
முகமும் தேய்ந்து
போனதெனில்
ஏன்
தோன்றின
வாழ்ந்தன
கடந்தன
மறைந்தன
கரைந்தன
காரணமே
இல்லாமல்?
சொல்லாமல்?


கண் சிமிள்

March 27, 2017

கையளாவிய கூழ் அல்ல
கடித்துச் சுவைத்த கனியுமல்ல
கண்ணளாவிய கவி.

நீ


ஈர்ப்பு!

March 24, 2017

அது இல்லையென்று

எப்படிச் சொல்ல முடியும்?
இரும்பும் காந்தமும்
இழுத்துக்கொண்டுதான்
இருக்கும்.
இறுதி மூச்சு என்று
செல்லுக்கு எப்படித் தெரியும்?
மண்ணிற்குப் போன பின்னும்
மன்றாடும் வழி உண்டாவென!
ஈர்ப்பு.
வாழ்வை இழுக்கும்
தாம்புக்கயிறு.


மொழி

May 8, 2016

பேசப்படுவது மட்டுமா மொழி?
எழுத்தெல்லாம் மொழியாகித்தான் விடுமா?
மொழியின் இடையில்
சகஜ நிலையில்
பேசாமல் பேசுமொரு பேச்சு ஓடும்
எழுதாத ஒரு பொருள் உறவாடி நிற்கும்
இங்கும் அங்கும் இடையில் தாவும்
மின்னெழுத்து பொறியாகித்
தீயை வளர்க்கும்!
தீயில் காயும் இரு உயிர்கள்
மொழியில் நனையும் நீராடும்
மொழி பார்த்தங்கு நாணிச் சிரிக்கும்!

 
The sunken wor(l)ds

Will you call it a language because it was spoken?
Or just because it was written?
What is there? hidden in between words?
The unspoken uttering
makes one excited
The sparks of the fast moving
electronic letters
make the fire to warm up the love
and shower in the unspoken.
Language observes it shamfully!


கண்ணிற்பாவை

April 8, 2015

நீ இன்று என்
கண்ணில்
பட்டு
காதல் வயப்பட்டேன்
என்று சொல்வதற்கில்லை
வந்து போகும்
காற்று போல்
என்றும் நீ
இங்கும்
அங்கும்தான்!
காதல் மட்டும்
கன்னம் போட்டு
நெஞ்சில்
நிலைத்து விட்ட போது
வந்த வயது மட்டும்
போய்ப்போய்
வருவதில்லை,
என்பது
வருத்தம்தான்!
ஆனால்
காதல் மட்டும்
கண்ணை விட்டுப்
போகாமலிருக்கிறதே!
சரி!


நினைவுகள் வந்தன

April 7, 2015
காலையில் எழுந்ததும்
கனவுகள் போய்
நினைவுகள் வந்தன.
காற்றோடு போகட்டும்
என்றால்? விட்டா போகின்றன?
நல்லது, கெட்டது
விட்டது, தொலைத்தது
பட்டது, பகன்றது
எனக்கோடி நினைவுகள்
வந்திங்கு கனவைத்
தொலைத்து
நினைவில் கூடிப்
பெருகி,
அன்று தொட்டு
இன்றுவரை
அடுக்கடுக்காய்
நினைவுகளென்று
தட, தட, மட, மடவென
தரவிறக்கமாகி..
என்றாவது இது
நிற்குமோ?.
பழசோடு புதுசு
புதுசோடு பழசு
என்று கலப்பின
நினைவுகளென்றொரு
கூட்டம் அலைந்து
கொண்டிருக்கிறது!
கூட்டிக்கழித்துப் பார்த்தால்
நீயும் நானும்
வெறும் நினைவுகளே.
அது கனவாக இருந்தாலென்ன?
நினைவாக இருந்தாலென்ன?
நினைக்கத்தெரிந்த மனதிற்கு
மறக்கத்தெரியாமல் ஓர் வழி வைத்த
அந்த மாயக் கள்வனைக்
கண்டால் சொல்லுங்கள்.
’சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’
என்றவன் வன்தகடில்
இடம் மாற்றம் செய்துவிட்டு
ஹாய்யாகக் காற்றுப்போல்
உலாவலாம்

ஈர்ப்பு!

April 7, 2015

ஈர்ப்பு!
எங்கிருக்கிறது?
புறத்தே அழகில்
இளமையின்
புன்சிரிப்பில்
கூந்தல் முல்லையில்
தாவணி மடிப்பில்
தவழும் இடுப்பில்!
உள்ளே இதயத்தில்
அதை இயக்கும்
தசை நாணில்
நாண் முருக்கும்
திசுவில்
திசுவின்
கருவில்
கருவின்
திரியில்
திரியின்
அணுவில்
அணுவின்
கருவில்
கனமற்ற
துகள்களைக்
கவர்ந்திழுக்கும்
இருப்பாய்
அங்கு நிற்கும்
ஈர்ப்பு.